ஏ ஐ தொழில்நுட்பம் பெண்களுக்கு ஆபத்தா? அறிவா?
இன்றைய உலகத்தில் ஏ.ஐ தொழில்நுட்பம் மிக விரைவாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் பயன்பாடுகள் கணிசமாக அதிகரித்து வருவதால் மனித வாழ்க்கை எளிமையாகவும், சிக்கனமாகவும் மாறி வருகிறது. ஆனால் இதன் மறைமுக பக்கங்களைப் பற்றி பொதுமக்கள் அதிகம் அறிந்திருக்கவில்லை. குறிப்பாக பெண்களுக்கு இது பெரும் ஆபத்தாக மாறிக்கொண்டிருக்கிறது. ஏனெனில் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் ஒருவர் எதையும் உருவாக்க முடியும் என்பது நம்மால் இன்று உணர முடிகிறது. இது ஒரு பக்கம் விஞ்ஞான முன்னேற்றம் எனத் தெரிந்தாலும், மற்றொரு பக்கம் மனித கெளரவத்தையும், தனி நபரின் உரிமையையும் கேள்விக்குள்ளாக்கும் செயல்களாக மாறி வருகின்றன.
பெண்கள் இன்றைய காலகட்டத்தில் சோசியல் மீடியாவில் அதிகமாக நேரத்தை செலவிடுகிறார்கள். இவர்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த தருணத்தையே பலர் தவறாக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, சில குற்றவாளிகள் பெண்களின் புகைப்படங்களை ஏ.ஐ மெஷின்களில் ஏற்றுவதன் மூலம் அந்த முகங்களை தவறான வீடியோக்களில் அல்லது கவர்ச்சியான, மன அழுத்தம் தரும் தருணங்களில் உருவாக்கி பணம் சம்பாதிக்கின்றனர். இது நேரடியாக அந்தப் பெண்களின் வாழ்க்கையையே தாக்கும் நிலைக்கு போய்விடுகிறது.
மனித முகத்தை புரிந்துகொள்வதில் ஏ.ஐ.க்கு இன்று மிகுந்த திறமை உள்ளது. ஒரு பெண்ணின் முகபடத்தை மட்டும் வைத்து, அதனை நிர்வாண படம் போல் மாற்றுவது, தவறான சூழ்நிலைகளில் வைத்து உருவாக்குவது போன்ற செயல்கள் சீரியளவில் நடக்கின்றன. சிலர் இதனை தவறாக பயன்படுத்தி அந்த பெண்களுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கின்றனர். இது ஒரு வகையான "டிஜிட்டல் பாலியல் வன்முறை" என்று கூறலாம். பாதிக்கப்பட்ட பெண்கள் பெரும்பாலும் அந்த செயலை பொதுமக்கள் அறிவது பயத்தினால் காவல் நிலையத்திலும் புகார் கொடுக்காமல் சும்மா போய்விடுகிறார்கள்.
ஏ.ஐ.போன்ற தொழில்நுட்பங்கள், மனிதரின் உரிமைகளுக்கு எதிராகப் பயன்படக்கூடிய போதுமிகுந்த ஆற்றல் கொண்டவை. ஒரு பெண்ணின் முகத்துடன் ப்ரோனோவிடியோக்கள் தயாரிக்கப்படும் அளவுக்கு இந்த தொழில்நுட்பம் பயங்கரமாக வளர்ந்துள்ளது. இதற்குப் பிறகு அந்தப் பெண் எப்படிக் சமூகத்தில் இயல்பாக இருக்க முடியும்? அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், பணியிடம், திருமண வாய்ப்புகள் அனைத்தும் அதனால் பாதிக்கப்படுகின்றன. இது ஒரு பெண்ணின் வாழ்வையே பாழாக்கக் கூடிய நிலை.
இத்தகைய செயல்களை சட்டத்திற்குள் கொண்டு வந்து கடுமையாக தண்டிக்க வேண்டும். ஆனால் சட்டம் வரும் வரை பெண்கள் தங்களின் பாதுகாப்பைப் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும். முக்கியமாக அவர்கள் சோசியல் மீடியாவில் பகிரும் புகைப்படங்களில் கவனம் செலுத்த வேண்டும். முகத்தை தெளிவாக காட்டும், தனிப்பட்ட இடங்களில் எடுக்கப்படும் புகைப்படங்களை பொதுமக்களுக்கு கிடைக்கும்படி பதிவிடக்கூடாது. இது குற்றவாளிகளுக்கு ஒரு வாய்ப்பாக மாறிவிடும்.
அத்துடன், பாதுகாப்பான டிஜிட்டல் பழக்கங்களை பின்பற்றுதல் மிகவும் அவசியமான ஒன்றாகும். பெண்கள் தங்கள் சமூக வலைத்தள கணக்குகளில் 'privacy settings'ஐ சரியாக அமைத்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்ய முடியாத மாதிரி பாதுகாப்பு அமைப்புகளை சரியாக வைத்திருக்க வேண்டும். தவறான முயற்சிகள் ஏற்பட்டால் உடனடியாக அதன் ஸ்க்ரீன்ஷாட் எடுத்துவைத்து, இணைய குற்றப்பிரிவில் புகார் அளிக்க வேண்டும்.
இந்த உலகத்தில் பெண்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சி நம்மை பாதுகாப்பதற்காக இருக்க வேண்டும், பாழாக்குவதற்கல்ல. ஆனால் சிலர் அதை தவறாக பயன்படுத்தும் நிலை ஏற்படுவதால் விழிப்புடன் செயல்படவேண்டும். சமூகமும், குடும்பமும் பெண்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் மீது நேரும் டிஜிட்டல் தாக்குதல்களை எதிர்க்கும் திறனை உருவாக்க வேண்டும்.
இன்றைய வளர்ந்த உலகில் பெண்கள் தங்கள் கனவுகளையும், திறமைகளையும் வெளிக்கொணரத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களை அச்சுறுத்தும் இந்த ஏ.ஐ ஆபத்துகளை சமாளிக்க அவர்கள் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த மோசமான செயல்களை எதிர்த்து, சமூகத்தை பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
முடிவில், ஏ.ஐ நமக்கு ஒரு பலம் என்றாலும், அது நம்மை எப்படி பாதிக்கிறது என்பதையும் உணர்ந்து, அதனை கட்டுப்படுத்தும் சட்டங்கள், விழிப்புணர்வு, பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. பெண்கள் தங்களின் தனிப்பட்ட தரவுகளை பாதுகாக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் முதல் படியாகும்.

கருத்துகள்