யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை
யூசுஃப் நபி (அலைஹி வஸ்ஸலாம்) இஸ்லாமிய மதத்தின் முக்கியமான நபிமார்களுள் ஒருவராக கருதப்படுகிறார். யூசுப் நபியின் கதை குர்ஆனில் 12 வது சூரா (சூரா யூசுப்) எனும் தலைப்பில் விரிவாக விவரிக்கப்படுகிறது. இது அவரது வாழ்க்கை பாடங்களை, சோதனைகளை எதிர்கொள்ளும் பொறுமையை, மன்னிப்பின் முக்கியத்துவத்தை, கடவுளின் மீது கொண்ட மேன்மையான தன்னம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.
யூசுப் நபியின் வாழ்க்கை சம்பவங்கள் பற்றி இங்கு காண்போம்
பிள்ளைப் பருவம்
யூசுப் நபியின் கதை அவருடைய சிறு வயதில் இருந்தே தொடங்குகிறது. அவர் யாகூப் நபியின் (அலைஹி வஸ்ஸலாம்) பத்துப் பிள்ளைகளில் ஒருவர். யாகூப் நபிக்கு யூசுப் நபி மீது தனிச்சிறப்பான காதல் இருந்தது. ஏனெனில் யூசுப் சிறந்த நற்பண்புகளையும்,குணங்களையும் மற்றும் அறிவாற்றலையும் கொண்டவர். இது, யூசுப் நபியின் சகோதரர்களிடையே அதிக பொறாமையை ஏற்படுத்தியது.
ஒரு இரவு, யூசுஃப் நபி அவருடைய தந்தைக்கு தான் கண்ட ஒரு கனவைக் கூறினார்.அதில் "பதினோரு நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் ஆகியவை என்னை வணங்குகின்றன" என்று கூறினார். யாகூப் நபி இந்த கனவின் அடிப்படையில் யூசுஃப் நபி மிகப்பெரிய நபியாக உயர்த்தப்படுவார் என்று உணர்ந்தார். ஆனால் நீ கண்ட கனவை உன் சகோதரர்களிடம் அவசரபட்டு கூறப்பட வேண்டாம் என்று அவரிடம் அறிவுறுத்தினார்.
சகோதரர்கள் செய்த துரோகம்
பொறாமையால் உந்தப்பட்ட யூசுப் நபியின் சகோதரர்கள் அவரைத் துன்புறுத்த திட்டமிட்டனர். அவரை கொல்ல நினைத்தபோது, அதேசமயம் அவரின் சகோதரர்களில் ஒருவன், "அவரை கொல்ல வேண்டாம். அவரை ஒரு கிணற்றில் தூக்கி வீசி விடுங்கள். அப்போது அந்த வழியாக வரும் ஒரு வணிகப் பயணிகள் கூட்டம் அவரை எடுத்துக் கொள்வார்கள்" என்று பரிந்துரைத்தார். இதற்காக அவர்கள் திட்டமிட்டது போல் அவர்கள் யூசுப் நபியை கிணற்றில் வீசிவிட்டு, அவரை ஓநாய்கள் கடித்துவிட்டதாகக் கூறி, பொய்யாக அவருடைய ரத்தம் கறைபட்ட உடையை அவர்களின் தந்தையிடம் கொடுத்தனர். அதைக் கேட்ட அவரின் தந்தை வேதனையில் துடித்தார்.
அடிமையாக மாற்றம்
அதேபோல் அந்த வழியாக வந்த வணிகப் பயணிகள் யூசுப்பை கண்டுபிடித்து காப்பாற்றி அவரை எகிப்திற்கு அடிமையாகக் கொண்டு சென்றனர். அங்கே அவரை அகிழாஸ் என்ற ஒரு முக்கியமான அரசாங்க அதிகாரி வாங்கிக்கொண்டு, அவரை தனது வீட்டில் வளர்த்து வர ஆரம்பித்தார். யூசுப் நபி ஒரு திடமான மற்றும் மிக அழகான இளைஞராக உயர்ந்தார், அதேசமயம் அவர்கள் வீட்டில் நல்ல அறிவான ஒருவராகவும் விளங்கினார்.
சோதனைகள்
யூசுப் நபியின் அழகின் காரணமாக அகிழாஸ் மனைவியான சுலைகா, அவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்றார். அவரை அடைய நினைத்து யூசுப் நபியை துரத்தினார். அவர் முன்புறம் ஓட பின்புறம் அவர் சட்டையை கிழித்து விட்டார். அந்த நேரத்தில் சுலேகா அவர்களின் கணவர் அங்கே வந்து விடுகிறார். உடனே தன்னை தற்காத்துக் கொள்ள யூசுஃப் நபி மீது பொய் குற்றச்சாட்டு சொன்னார். ஆனால் அவரின் கணவரோ அங்கு நடந்ததை நன்கு உணர முடிந்தது. இருந்தாலும் யூசுஃப் நபி அவர்களுக்கு பிரச்சனை ஏற்படாத வகையில் அவரை சிறையில் அடைத்தார்.
சிறைவாசமும், கனவுகளின் விளக்கம்
சிறையில் இருக்கும் இருவரின் கனவுகளுக்கு விளக்கம் கூறியதன் மூலம் யூசுஃப் நபி நபித்துவத்தை வெளிப்படுத்தினார். இறைவன் யூசுஃப் நபி அவர்களுக்கு கனவுக்கு விளக்கம் அளிக்கும் சக்தியை கொடுத்திருந்தார். ஒரு காரியதரிசி மற்றும் மற்றொரு கள்ளனின் கனவுகளுக்கு விளக்கமும் கொடுத்து அது பூர்த்தியும் ஆனது. இதனால் அவரின் புகழ் எகிப்து எங்கும் பரவியது. இந்நிலையில், எகிப்தின் மன்னனும் ஒரு கனவு கண்டார். அதற்கு விளக்கம் கேட்க அவரை சிறையில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.
மன்னனின் கனவு விளக்கம்
யூசுஃப் நபி அவர்கள் மன்னனின் கனவை விளக்கினார்கள். ஏழு வளமான ஆண்டுகளுக்கு பின்னர் ஏழு வறுமை ஆண்டுகள் வரப்போவதாகவும், அதற்கு இடையில் நாம் உணவுப் பொருட்கள் மற்றும் தானியங்களை சேகரித்து வைத்துக் கொள்ளும் படியும் ஆக விளக்கம் அளித்தார்.இதனால், மன்னன் யூசுப்பின் அறிவைப் பாராட்டி அவரை பொருளாதார அமைச்சராக நியமித்தார்.
பின்னாளில் அவர் கூறியது போல ஏழு வளமான ஆண்டுகள் இருந்தது. அப்போது கிடைத்த தானியங்களை அவர் சேகரித்து வைத்து ஏழு வறுமையான ஆண்டுகளில் அதை விநியோகம் செய்தார். இவ்வாறாக அடிமையாக இருந்த யூசுப் நபி மன்னரின் அமைச்சரவையில் இடம் பிடித்தார்.
தந்தையுடன் மீண்டும் சந்தித்தல்
வறுமை ஆண்டுகளில் யூசுப் நபியின் சகோதரர்கள் அவரிடம் தங்கள் ஆடுகளுக்கு உணவிற்காகவும் தங்களுக்கான தானியங்களுக்காகவும் போன போது, அவரை அடையாளம் காண முடியாமல் போகிறது. ஆனால் யூசுஃப் நபி அவர்களுக்கு தன் சகோதரர்களை கண்டு கொள்ள முடிந்தது. தன் மீது அதிக அன்பு வைத்திருக்கும் தனது தந்தையை சந்திக்க முடிவு செய்து பல சோதனைகள் செய்தார். பின் யூசுப் அவர்கள் தன் தந்தையையும், சகோதரர்களையும் மீண்டும் சந்தித்து தன் சகோதரர்களை மன்னித்து, எகிப்தில் அவர்களை நல்ல முறையில் வறுமை தெரியாதபடி வாழவைத்தார்.
வாழ்க்கை பாடங்கள்
யூசுப் நபியின் கதை பல ஆழ்ந்த வாழ்க்கை பாடங்களை நமக்கு அளிக்கிறது. சோதனைகளில் பொறுமை, துரோகம் நேர்ந்தாலும் மன்னிப்பு தருவது,இறைவன் மேல் கொண்ட நம்பிக்கை ஆகியவை அவரிடம் இருந்து நாம் பெற்று கொள்ளும் பாடமாக உள்ளது.

கருத்துகள்