அரசே! கைரேகை இல்லை என்ற காரணத்தால் ஏழைகளின் அன்னத்தை பறிக்க வேண்டாம்!”
தமிழக ரேஷன் முறைகேடுகள் – மக்கள் கேட்கும் கேள்விகள், அரசாங்கம் சொல்ல வேண்டிய பதில்கள்
தமிழக அரசின் ரேஷன் அமைப்பு என்பது சாமானிய மக்களின் வயிற்றில் அன்னம் போடும் மிக முக்கியமான சமூக நலத் திட்டமாகும். அரிசி, பருப்பு, எண்ணெய், சீனி, கோதுமை—இவை எல்லாம் சந்தை விலைகளை தாங்கிக் கொள்ள முடியாத குடும்பங்களுக்கு ஒரு ஆதரவாகக் கிடைக்கின்றன. இந்த ரேஷன் திட்டம் தான் தமிழகத்தின் பெரும்பாலான ஏழை குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை முன்னெடுக்க உதவும் அடிப்படை தூணாக உள்ளது. ஆனால் அந்தத் தூணுக்குள் இன்று ஊழல், சுரண்டல், முறைகேடு, அநீதி, புறக்கணிப்பு போன்ற புற்றுநோய்கள் பரவி வருகின்றன.
கைரேகை விழாத பெரியோர்கள், மூத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் – அவர்களின் குரல் யாருக்குச் சொல்லும்?
தமிழ்நாட்டில் குறைந்தது ஒரு ஊரை எடுத்தால், 500 பேரில் உண்டான 50 பேருக்கு கைரேகை விழாத பிரச்சனை எப்போதும் உள்ளது. வயதானதால் தோல் மெலிந்து கைரேகை மங்கிவிடும். சிலருக்கு உடல்நிலை பிரச்சனை காரணமாக கைரேகை தெளிவாக இருக்காது. சில இளைஞர்களுக்கு கூட இயற்கையாக கைரேகை மங்கிவிடும்.
ஆனால் ரேஷன் கடைக்குச் சென்றால் ஒரு சொல்:
“கைரேகை விழலை… ரேஷன் கொடுக்க முடியாது.”
அந்த நபர் கேட்கிறார்:
“சரி, எப்படித் தீர்வு காண்பது? என்ன செய்யணும்?” என்று
ஆனால் அதிகாரியின் பதில்:
“எங்க அலுவலகத்துக்கு சென்று பாருங்க.” என்று.
அவரும் அந்த அரசாங்க
அலுவலகத்துக்குச் செல்வார். அங்கேயும் யாரும் தீர்வு தரமாட்டார்கள்.
இதை நானே என் கண்ணால் பார்த்திருக்கிறேன் அவர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன்.
இறுதியில் அந்த மாத ரேஷன் பொருள் அவருக்கு கிடையாது. ஆனால் அந்தப் பொருட்கள் ரேஷன் கடை ஊழியர்களால் வேறு கடைகளுக்கு விற்பனை செய்து வங்கிக் கணக்குகளாக மாறுகின்றன.
இந்தக் கேள்வி அரசாங்கத்திடம்:
“கைரேகை விழாதவர்களுக்கு ரேஷன் தராமல் விட்டு, அந்தப் பொருட்களை அதிகாரிகள் விற்று பணம் சம்பாதிக்கும் போது, அந்த அறிக்கை எங்கு செல்கிறது? அது யாருக்கு போகிறது? ஏன் அதை கண்டுபிடிக்க முடியவில்லை?”
20 கிலோ அரிசி கிடைக்கும் இடத்தில் குறைந்து 17 கிலோ மட்டுமே கிடைப்பது மிகப்பெரும் குற்றச்சாட்டு – இந்த கொள்ளையின் அளவு தெரியுமா?
ஒரு ரேஷன் கார்டுக்கு 20 கிலோ அரிசி கொடுக்கப் படுகிறது. ஆனால் அது ரேஷன் கடையின் தராசில் 20 கிலோ எனக் காட்டும். ஆனால் நியாயமான தராசில் பார்த்தால் 17 கிலோ மட்டுமே இருக்கும்.
ஒவ்வொரு கார்டுக்கும் 3 கிலோ குறைத்தால், ஒரு ஊரில் 1000 கார்டுகள் இருந்தால் 3000 கிலோ அரிசி மறைந்து விடும்.
3000 கிலோ அரிசி = ஒரு லாரி நிறைய அரிசி
அதை விற்கும் போது கிடைக்கும் பணம் = அதிகாரிகளுக்கு ஓடும் வருமானம்
இந்த தமிழ் மக்களின் வயிற்றிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட அரிசியை யார் பாதுகாக்கப் போகிறார்கள்?
இது அரிசியில் மட்டுமல்ல அவர்கள் போடும் பருப்பிலும் சீனியிலும் தான்.
அரசாங்கத்திடம் கேட்க வேண்டிய கேள்விகள் (மக்களின் குரலாக):
கைரேகை விழாத மக்களுக்கு மாற்று முறையை ஏன் உடனடியாக ஏற்படுத்த முடியவில்லை?
ரேஷன் பொருள் பெற முடியாத நாட்கள், மாதங்களுக்கு பொறுப்பாக இருப்பவர் யார்?
வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், கைரேகை மங்கியவர்கள்—இவர்கள் ரேஷன் இல்லாமல் பட்டினி கிடக்கும்போது அரசு என்ன செய்கிறது?
ரேஷன் எடைகளை அரசு ஏன் கண்காணிக்கவில்லை?
ஊழல் புகார்களை உடனடி நடவடிக்கை எடுத்து தீர்ப்பதற்கான தனி குழு ஏன் உருவாக்கப்படவில்லை?
ரேஷன் கடைகளில் பெரும்பாலான கடைகளில் CCTV இருந்தாலும் கூட ஏன் பதிவுகள் சரிபார்க்கப்படவில்லை?
ரேஷன் பொருட்களை அதிகாரிகள் மறைமுகமாக விற்பனை செய்தால், அதற்கான கடுமையான தண்டனை எங்கே?
இப்படி ஆன கேள்விகளை அரசாங்கத்திடம் அடுக்கிக் கொண்டே போகலாம்.
மக்களுக்கான விழிப்புணர்வு:
மக்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை தாங்களே காக்கத் தயாராக இருந்தால் மட்டுமே அதிகாரிகள் பயப்படுவார்கள்.
அதற்கான சில முக்கிய அறிவுரைகள்:
1. கைரேகை விழாதால் நீங்கள் செய்ய வேண்டியது:
ரேஷன் கடை முன்பதிவு புத்தகத்தில் உங்கள் பிரச்சனையை எழுத சொல்லுங்கள்.
எழுத மறுத்தால் வீடியோ எடுத்து வைக்கலாம்.
ஈஸ்வரன் குதிரை போல் அமைதியாக நிற்க வேண்டாம்; உங்கள் உரிமையை பேசுங்கள்.
1967 Toll-Free PDS Help Line Number-க்கு கால்செய்யுங்கள்.
“Fingerprint Failure Certificate” கேட்டு கட்டாயப்படுத்துங்கள்.
2. எடை குறைவாக கிடைத்தால்:
உடனே உங்கள் தராசில் சோதனை செய்யுங்கள்.
வித்தியாசத்தை வீடியோ எடுத்துப் பதிவுசெய்யுங்கள்.
ரேஷன் கடை ஊழியர் கையொப்பம் கேளுங்கள்.
புகார் பதிவு செய்யுங்கள்.
3. தராசின் நியாயத்தை சரிபார்க்க:
ஒவ்வொரு ரேஷன் கடையிலும் உள்ள முத்திரை தராசை பயன்படுத்தச் சொல்லுங்கள்.
வெளியிலும் போய் பார்க்கலாம்.
அரசாங்கம் செய்ய வேண்டிய அவசரமான மாற்றங்கள் (பரிந்துரைகள்):
1. கைரேகைக்கு மாற்றாக முகஅடையாளம் (Face Recognition) உடனடியாக கொண்டு வரப்பட வேண்டும்.
மொத்த இந்தியாவின் Aadhaar அமைப்பில் இது ஏற்கனவே செயல்படுத்தப் பட்டுவிட்டது.
கைரேகை விழாதவர்களுக்கு இந்த முக அடையாள முறையே முக்கிய தீர்வு.
2. OTP-based authentication (அடையாள OTP)
மொபைல் எண் இணைக்கப்பட்ட Aadhaar இருந்தாலே OTP மூலம் ரேஷன் பெற முடியும்.
3. வயதானவர்கள் மற்றும் கைரேகை பிரச்சனையுள்ளோருக்கான “No-Biometric Required Card”
இதற்கான தனி அடையாளம் உருவாக்கப்பட வேண்டும்.
4. ரேஷன் கடைகளில் நேரடி எடை கண்காணிப்பு
அரசு கட்டாயமாக இணையத்துடன் இணைக்கப்பட்ட “Digital Weighing Scale – auto report system” பயன்படுத்த வேண்டும்.
எடை குறைந்தால் கண்காணிப்பு மையத்தில் உடனே அலாரம் செல்ல வேண்டும்.
5. CCTV பதிவுகளை மக்கள் பார்க்க அனுமதி
CCTV நேரலை (live) பொதுமக்கள் பார்க்கக்கூடியதாக ஒரு மொபைல் ஆப் கொண்டு வர வேண்டும்.
6. ஊழல் புகார் செய்தால் 48 மணி நேரத்தில் தீர்வு
PDS Rapid Action Team உருவாக்கப்பட வேண்டும்.
7. ரேஷன் பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடுமையான குற்ற சட்டம்
இது சாதாரண தண்டனையால் முடியாது.
ரேஷன் பொருட்களை திருடுவது = ஏழை மக்களின் உணவை திருடுவது எனவே இது “ஊழல் தடுப்பு சட்டத்தில்” சேர்க்கப்பட வேண்டும்.
முடிவுரை: சாமானிய மக்களின் குரல் – அரசு இதைக் கேட்க வேண்டிய நேரம் இது
இந்த ரேஷன் அமைப்பு, நம் தமிழகத்தின் பெரும் பெருமை.
அரிசி கிடைக்கும் போது ஒரு குடும்பத்தின் கண்களில் தெரியும் நிம்மதி—அதற்கு மாற்றுக் கருவி இல்லை.
அந்த நிம்மதியையே சில அதிகாரிகள், ஊழியர்கள், தனிப்பட்ட நலனுக்காக துஷ்பிரயோகம் செய்து கொள்ளையடிக்கின்றனர்.
வயதானவர்கள், கைரேகை விழாதவர்கள், மாற்றுத்திறனாளிகள்—இவர்கள் பசியால் தவிக்கின்றனர்.
ஆனால் நாட்டு வளத்தைப் பாதுகாக்க வேண்டிய அமைப்பு இவர்களையே உலுக்கிக் கொண்டிருக்கிறது.
இந்தக் கட்டுரை ஒரு புகார் அல்ல.
இது ஒரு எச்சரிக்கை.
ஒரு வேண்டுகோள்.
ஒரு விழிப்புணர்வு.
இதை அரசு கவனிக்க வேண்டும்.
மக்கள் விழிக்க வேண்டும்.
எல்லோரும் சேர்ந்து இந்த ஊழல் சக்கரத்தை உடைக்க வேண்டும்.
மாண்புமிகு அரசே, நீங்கள் போடும் ஒவ்வொரு திட்டத்தின் உண்மையான பலனும் கடைக்கோடி மனிதனுக்குச் சென்று சேரும்போதே, ஒரு நல்லாட்சி மலரும். சாமானியனுக்குச் சேர வேண்டிய
உரிமைகள் சுரண்டப்படுவதைத் தடுத்து நிறுத்துங்கள். இதுவே மக்களின் எதிர்பார்ப்பும், கேள்வியும் ஆகும்.


கருத்துகள்