பொங்கல் பரிசு 3000 ரூபாய் கண் துடைப்பு நாடகமா? அல்லது மக்களை ஏமாற்றும் திட்டமா?

 தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சியின் கடைசி ஆண்டில், பொங்கல் பரிசாக ரூபாய் 3000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைக் கேட்டவுடன் பலருக்கும் நினைவுக்கு வருவது ஒன்றுதான். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் ரூபாய் 2500 வழங்கப்பட்டபோது, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் அவர்கள் “2500 போதாது, 5000 கொடுக்க வேண்டும்” என்று வாதிட்ட காட்சிகள். அப்போது மக்களின் மனதில் ஒரு எதிர்பார்ப்பு விதைக்கப்பட்டது. “இவர் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் அதிகமாக தருவார்” என்ற நம்பிக்கை உருவானது.

பொங்கல் பரிசு 3000 ரூபாய் கண்துடைப்பு நாடகமா
பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளும் தம்பதியினர்

ஆனால் இன்று அவர் முதல்வராக இருக்கும் நிலையில், அதே வாக்குறுதி நிறைவேறவில்லை. ரூபாய் 5000 எங்கே? ரூபாய் 3000 என்ற எண்ணிக்கையில் தான் எல்லாம் முடிந்துவிட்டது. அதுவும் இந்த அறிவிப்பு வருவதற்கான நேரத்தை கவனித்தால், தேர்தல் நெருங்கும் சூழல் தான் முதலில் நினைவுக்கு வருகிறது. ஏற்கனவே ஆட்சியின் மீது பல தரப்பிலிருந்தும் அதிருப்தி குவிந்து கொண்டிருக்கும் நிலையில், மக்களின் மனதை சற்றே சமாளிக்க ஒரு தொகை வழங்கப்படுகிறது என்ற உணர்வை மறுக்க முடியவில்லை.

கடந்த சில வருடங்களாக திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அபிவிருத்தி உணர்வு என்ன? நாம் அவர்களைத் தேர்ந்தெடுத்ததனால் நம் வாழ்க்கையில் எந்த மாற்றம் ஏற்பட்டது? வேலைவாய்ப்பு, விலைவாசி, அடிப்படை வசதிகள், சட்ட ஒழுங்கு – இவற்றில் மக்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைத்ததா என்ற கேள்விகள் இப்போது பலரின் மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதனால் தான் “அடுத்த தேர்தலில் இவர்களுக்கே மீண்டும் வெற்றி தர வேண்டுமா?” என்ற சிந்தனை மக்களிடையே இயல்பாக உருவாகியுள்ளது.

இத்தனை கேள்விகள் இருக்கும்போது, “திராவிட மாடல் ஆட்சி 2.0 வெற்றிகரமாக செயல்படுகிறது” என்று தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்வது பலருக்கு ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது. மூவாயிரம் ரூபாய் கொடுத்ததையே ஒரு பெரிய சாதனை போல விளம்பரம் செய்வதும், அது அவர்களின் சொந்த பணம் போல பேசுவதும் மக்களின் கோபத்தை அதிகரிக்கிறது. உண்மையில் அந்த ரூபாய் 3000 எங்கிருந்து வருகிறது? அது அரசியல்வாதிகளின் தனிப்பட்ட பையிலிருந்து வரவில்லை. அது மக்களாகிய நாமே கட்டிய வரிப்பணத்தில் இருந்து எடுக்கப்பட்டு, மீண்டும் நமக்கே கொடுக்கப்படும் தொகை.

“என் காசை எடுத்து, எனக்கே கொடுத்து, அதற்காக என்னிடமே நீ ஓட்டு கேட்கிறாயா?” என்ற கேள்வி இன்று பல வீடுகளில், பல தேநீர் கடைகளில், பல வாட்ஸ்அப் குழுக்களில் ஒலிக்கிறது. ஒரு வருட பொங்கலுக்காக கொடுக்கப்படும் இந்த தொகை, கடந்த நான்கு வருடங்களில் வழங்கப்படாத பல வாக்குறுதிகளை மறைக்குமா? நான்கு பொங்கல்களுக்கு கிடைக்க வேண்டிய பலனை, ஒரே பொங்கலில் கொடுத்துவிட்டோம் என்ற கணக்கை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?

இங்கே மக்கள் ஒன்று தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த பணத்தை வாங்கக் கூடாது என்று யாரும் சொல்லவில்லை. அது உங்கள் பணம். அதை வாங்குவது உங்கள் உரிமை. ஆனால் அந்த ஒரு முறையான தொகைக்காக, எதிர்காலத்தில் நூறு முறை, ஆயிரம் முறை பாதிப்புகளைச் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகக் கூடாது. ஒருமுறை வாங்கிய காசுக்காக, நீண்ட கால தண்டனைகளை ஏற்றுக் கொள்வது தான் உண்மையான இழப்பு.

அரசு என்பது பரிசு கொடுத்து ஓட்டு வாங்குவதற்கான அமைப்பு அல்ல. நல்ல நிர்வாகம், நேர்மையான ஆட்சி, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் திட்டங்கள் – இவையால் தான் ஒரு அரசு மதிப்பிடப்பட வேண்டும். வெறும் பொங்கல் பரிசு, இலவசம், அறிவிப்பு அரசியல் ஆகியவை தற்காலிக சந்தோஷத்தை மட்டுமே தரும். நிரந்தர முன்னேற்றத்தை அல்ல.

எனவே, இந்த மூவாயிரம் ரூபாயை பொங்கல் பரிசாக கொடுத்து ஓட்டு கேட்கிறார்கள் என்றால், அதை நாம் தெளிவான மனதுடன் பார்க்க வேண்டும். “இது என் பணம்” என்ற உண்மையை மனதில் வைத்துக் கொண்டு, அந்த தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் ஓட்டு போடும் போது, உணர்ச்சியால் அல்ல, அறிவால் முடிவு எடுக்க வேண்டும். யார் உண்மையில் நல்ல ஆட்சியை தர முடியும்? யார் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் திறன் கொண்டவர்கள்? என்ற கேள்விகளுக்கான பதிலை பார்த்து தான் மக்கள் தீர்ப்பு வழங்க வேண்டும்.

ஒருமுறை வாங்கிய பணத்திற்காக, நமது எதிர்காலத்தை அடகு வைக்காமல், நம்மையும் நம் பிள்ளைகளையும் பாதுகாக்கும் ஒரு ஆட்சியை தேர்ந்தெடுப்பதே உண்மையான பொங்கல் பரிசாக இருக்க வேண்டும்.

2026 இல் மகுடம் சூடப் போகும் முதலமைச்சர் யார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை