விபத்துகள் ஏன் நடக்கிறது? தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
விபத்துகள் எப்படி நடக்கிறது?
அவற்றிலிருந்து நாம் எப்படி தப்பித்துக் கொள்ளலாம்?
இன்று நம்மைச் சுற்றி நடக்கக்கூடிய விபத்துகளை கவனமாக பார்த்தால், பெரும்பாலானவை “விதி”யால் நடக்கவில்லை என்பது புலப்படும்; நம்முடைய அலட்சியம், அவசரம், கவனக்குறைவு, தேவையில்லாத வீராப்பு இவைகளால்தான் நடக்கிறது என்று தெளிவாக புரியும்.
![]() |
| விபத்துகள் விழிப்புணர்வு |
இன்றைக்கு தெருவுக்குத் தெரு சாராயக் கடைகள் அதிகமாகிவிட்டன. இதன் விளைவு என்னவென்றால், குடித்துவிட்டு ரோட்டில் நடந்து செல்பவர்களும், வாகனம் ஓட்டுபவர்களும் அதிகரித்திருக்கிறார்கள். சாராயம் குடித்த பிறகு உடல் நிதானம் இழக்கிறது. ஆனால் மனசு மட்டும் “நான் சரியாகத்தான் இருக்கேன்” அதாவது ஸ்டெடியா இருக்கேன் என்று பொய் தைரியத்தை கொடுக்கும். அந்த நிலையில்தான் பலர் தாங்களாகவே கீழே விழுந்து தங்கள் உயிரை இழக்கிறார்கள். சில சமயம் அவர்களின் தவறு, இன்னொருவரின் உயிரையும் பறிக்கிறது.
அடுத்ததாக, இன்றைய கல்லூரி இளைஞர்களிடம் அதிகமாக காணப்படும் ஒன்று – வேகம்.
“ரேஸ் ஓட்ட போறேன்” என்று சொல்லிக்கொண்டு, அதிக விலை கொண்ட பைக்குகளை வாங்கி, ரோட்டை ரேஸ் ட்ராக் போல நினைத்து ஓட்டுகிறார்கள். ஆனால் ரோடு என்பது பொதுமக்களுக்கான இடம். அங்கே வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள், மெதுவாக செல்லும் வாகனங்கள் எல்லாம் இருக்கின்றன என்பதை அவர்கள் நினைப்பது இல்லை. அந்த வேகத்தில் போய் மோதினால், தவறு யாருடையது என்று விவாதிக்க நேரமே இருக்காது. ஒரு விநாடியில் வாழ்க்கை முடிந்துவிடும்.
இன்னொரு மிக முக்கியமான காரணம் – வாகனம் ஓட்டிக்கொண்டே மொபைல் போன் பயன்படுத்துவது.
ஒரு கால், ஒரு மெசேஜ் என்று நினைத்து பார்வையை ஒரு விநாடி திருப்பினாலே போதும். அந்த ஒரு வினாடி தான் உயிருக்கும் மரணத்துக்கும் இடையிலான எல்லையாக மாறி விடுகிறது. உலகம் முழுவதும் நடந்த ஆய்வுகள் சொல்லும் உண்மை என்னவென்றால், குடித்துவிட்டு ஓட்டுவதை விட சில நேரங்களில் மொபைல் பார்த்துக்கொண்டு ஓட்டுவது அதிக ஆபத்தானது.
நம்மில் பலர் இன்னொரு விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்வதே இல்லை. அது வாகன பராமரிப்பு.
வண்டியோட பிரேக் சரியா இருக்கிறதா,
டயரில் காற்று போதுமா,
லைட் வேலை செய்கிறதா,
கிளட்ச், ஆக்சிலேட்டர் சரியாக உள்ளதா
என்று முன்பே சரிபார்க்காமல், “போன பிறகு பார்த்துக்கலாம்” என்று அலட்சியப்படுத்துகிறோம். ஆனால் அந்த சிறிய அலட்சியமே, ரோட்டில் பெரிய விபத்தாக மாறுகிறது.
தூக்கமின்மை இன்னொரு ஆபத்தான விஷயம்.
இரவு முழுக்க தூங்காமல்,அடுத்த அடுத்த சவாரிக்காக, மொபைல், சமூக வலைத்தளங்கள், மது, வேலை என உடலை சோர்வடையச் செய்து கொண்டு வாகனம் ஓட்டும் போது, சிலர் அறியாமலே தூங்கிவிடுகிறார்கள். இது குடித்துவிட்டு ஓட்டுவதற்கு சமமான ஆபத்து என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அந்த ஒரு நொடி தூக்கம், பல குடும்பங்களின் எதிர்காலத்தை ஒரே விநாடியில் அழித்து விடுகிறது.
பாதயாத்திரை நடந்து செல்லுபவர்களும் விபத்துகளுக்கு ஆளாகிறார்கள். ரோடு கடக்கும் போது அவசரம், கவனக்குறைவு, காதில் இயர் போன் போட்டுக் கொண்டு சுற்றுப்புறத்தை கவனிக்காமல் நடப்பது போன்றவை பெரிய ஆபத்துகள். “வாகனம் தான் கவனமாக வரணும்” என்று நாம் நினைப்பதும் தவறு. நாமும் நம்முடைய பாதுகாப்பில் பங்கெடுக்க வேண்டும்.
ஆட்டோ, ஷேர் ஆட்டோ போன்ற வாகனங்களில் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றுவது இன்னொரு விபத்து காரணம். ஓட்டுநரின் கட்டுப்பாடு குறையும், வண்டி தடுமாறும். “சரி விடுங்க, போயிடலாம்” என்று நாம் ஏறினாலும், அந்த முடிவு நம்ம உயிரையே கேள்விக்குறியாக மாற்றலாம்.
பஸ்ஸில் பயணம் செய்யும் சிலர், குறிப்பாக மாலை அணிந்திருப்பவர்கள், பஸ்ஸுக்குள் ஆட்டம் போடுவது, சத்தம் போடுவது, டிரைவரின் கவனத்தை திசை திருப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இது நல்ல பக்தியும் அல்ல, நல்ல செயலும் அல்ல. டிரைவரின் கவனம் ஒரு விநாடி சிதறினாலே, பெரிய விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது.அது போன்ற விபத்துகள் நடந்திருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
மேலும், சாலை விதிகளை மதிக்காததும் ஒரு பெரிய காரணம். சிக்னலை மீறுவது, ஹெல்மெட் அணியாமல் ஓட்டுவது, சீட் பெல்ட் போடாமல் பயணம் செய்வது போன்றவை நமக்கு “சின்ன விஷயம்” போல தோன்றினாலும், அதுவும் விபத்து நேரத்தில் உயிரைக் காக்கும் முக்கியமான பாதுகாப்புகள் தான்.
இந்த எல்லா விபத்துகளில் இருந்தும் தப்பிக்க பெரிய விஞ்ஞானமும், பெரிய சட்டமும் தேவையில்லை.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்.
வேகத்தை வீரமாக நினைக்காதீர்கள்.
வாகனம் ஓட்டும் போது மொபைல் போனைத் தவிருங்கள்
வாகனத்தின் நிலையை முன்பே சரிபாருங்கள்.
தூக்கம் வந்தால் வாகனம் ஓட்டாதீர்கள்.
அளவுக்கு அதிகமான ஆட்கள் ஏற்றும் வாகனங்களில் பயணம் செய்யாதீர்கள்.
பாதசாரியாக இருந்தாலும் முழுக் கவனம் செலுத்துங்கள்.
சாலை விதிகளை கடைபிடியுங்கள்.
இதை எல்லாம் நாம் கொஞ்சம் கவனித்தாலே போதும்.
விபத்துகள் குறையும்.
உயிர்கள் காப்பாற்றப்படும்.
நம்ம உயிர் நமக்காக மட்டும் அல்ல…
நம்ம வீட்டில் நம்மை நம்பி காத்திருக்கிறவர்களுக்காகவும் தான்.
ஒரு நிமிட கவனம் –
ஒரு முழு வாழ்க்கையை காப்பாற்றும்.
குடியில் மூழ்கி போனவர்களுக்கு ஒரு பதிவு

கருத்துகள்