ஒரு நடிகர் ஒரு இடத்தின் பெயரையே மாற்றிவிட்டால்…
கமலஹாசன் நடித்த சில திரைப்படங்கள் வெறும் கதைகளாக மட்டுமல்ல, அந்தந்த இடங்களின் அடையாளமாகவே மாறி இருப்பதை நாம் பார்க்கலாம். அந்த வகையில் தமிழ் சினிமா வரலாற்றில் தனித்த இடம் பிடித்த படம் தான் குணா.
கொடைக்கானலில் அமைந்திருந்த ஒரு குகை, முன்பு Devil’s Kitchen அல்லது Devil Cave என்று அழைக்கப்பட்டு வந்தது. அந்த இடம் பற்றி மக்களிடம் இருந்தது ஒரு மர்மமும் பயமும் கலந்த எண்ணமே. ஆனால் 1991-ஆம் ஆண்டு வெளிவந்த குணா திரைப்படம், அந்தக் குகையின் அடையாளத்தையே மாற்றி விட்டது.
குணா படத்தில், கமலஹாசன் நடித்த கதாபாத்திரத்தின் மனநிலையும், தனிமையும், காதலும் உச்சத்தை எட்டும் இடமாக அந்தக் குகை பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக “கண்மணி அன்போடு காதலன்” என்ற பாடலும், படத்தின் இறுதி காட்சிகளும் அதே இடத்தில் படமாக்கப்பட்டன. இதன் பிறகு, மக்கள் அந்த இடத்தை Devil Cave என்று அல்ல, “குணா குகை” என்றே அழைக்கத் தொடங்கினர். இது ஒரு திரைப்படம் ஒரு இடத்தின் பெயரையே மாற்றிய அபூர்வமான நிகழ்வு.
இந்த குகையில் படமாக்கப்பட்ட காட்சிகளில் முக்கியமான ஒன்று, கமலஹாசன் உண்மையிலேயே அந்த ஆபத்தான இடத்திற்குள் சென்று நடித்ததுதான். செட் அல்லது காட்சிப்படையான அமைப்புகள் இல்லாமல், உண்மை இடத்தில் நடிப்பது என்பது அக்காலத்தில் மிகப்பெரிய துணிச்சல். அந்த துணிச்சலே குணா படத்தை இன்று வரை நினைவில் நிற்கும் ஒரு கலைப்படைப்பாக மாற்றியுள்ளது.
சமீப காலத்தில் வெளியான மலையாள திரைப்படமான Manjummel Boys இந்த குணா குகையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. “இந்தக் குகைக்குள் விழுந்தால் மீண்டும் வெளியே வர முடியாது” என்ற பொதுவான நம்பிக்கையை உடைத்து, நண்பர்களில் ஒருவர் தவறி விழுந்தபோது, அவரை உயிரோடு மீட்டு வரும் நட்பின் போராட்டமே அந்தப் படத்தின் மையக் கருத்து.
அந்த நண்பர் மேலே மீட்கப்பட்டு வரும் காட்சியில், பின்னணி இசையாக குணா படத்தின் ‘கண்மணி அன்போடு’ பாடல் பயன்படுத்தப்பட்டது. இது தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, பல மொழி ரசிகர்களுக்கும் ஒரு உணர்ச்சி தருணமாக மாறியது. அதே நேரத்தில், அந்தப் பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா அந்தப் படக்குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்ததும் குறிப்பிடத்தக்கது. இது ஒரு பாடல் காலம் கடந்தும் எந்த அளவுக்கு உயிரோடு இருக்கிறது என்பதற்கான மற்றொரு சான்று.
Manjummel Boys படத்தில் குணா குகை போன்ற அமைப்பு செட் மூலம் உருவாக்கப்பட்டிருந்தாலும், குணா படத்தில் அந்த ஆபத்தான குகைக்குள் உண்மையாகவே சென்று நடித்தவர் கமலஹாசன் என்பதே அந்தப் படத்தின் தனிச்சிறப்பு. இதுவே ஒரு நடிகர் கதாபாத்திரத்திற்காக எவ்வளவு தூரம் செல்ல தயாராக இருக்கிறார் என்பதையும் காட்டுகிறது.
இந்த எல்லா காரணங்களையும் நினைத்துப் பார்க்கும் போது, குணா என்பது ஒரு திரைப்படம் மட்டுமல்ல. அது ஒரு இடத்தை அடையாளமாக மாற்றிய படம், ஒரு பாடலை காலத்தைத் தாண்டி கொண்டு சென்ற படம், மற்றும் ஒரு நடிகரின் அர்ப்பணிப்பை சினிமா வரலாற்றில் பதித்த படம்.
இந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம்,
நான் கமலஹாசன் ரசிகன் என்பதைச் சொல்லிக்கொண்டு இங்கு விடைபெறுகிறேன்.
கருத்துகள்