சைத்தானிடமிருந்து ஏன் மனிதனை இறைவன் ஏன் பாதுகாக்க நினைக்கின்றான்?

 எனது அன்பான வாசகர்களுக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக 

 அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.

Satan's trick to mislead man
Image Credit: Created with Gemini AI

இந்த ஒரு வார்த்தையை நாம தினமும் சொல்லுரோம். சிலர் தொழுகைக்கு முன் சொல்ராங்க, சிலர் குர்ஆன் ஓதும் நேரத்துல சொல்றாங்க, சிலர் வெறும் பழக்கத்திற்காக கூட சொல்கிறார்கள். ஆனால் இந்த வார்த்தையோட உண்மையான அர்த்தத்தையும், இதன் பின்னால் மறைந்திருக்கும் ஆபத்தையும், இதன் மூலம் நாம் யாரிடமிருந்து பாதுகாப்பு தேடுகிறோம் என்பதையும் உணர்ந்து சொல்றோமா என்ற கேள்வி மிக மிக முக்கியமானது. ஏனென்றால் அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்று சொல்லப்படுவது ஒரு சடங்கிற்காக கிடையாது. அது ஒரு நமக்கான எச்சரிக்கை. அது ஒரு போர் அறிவிப்பு. அது மனிதன் மற்றும் அவனுக்குப் அவன் கண்களுக்கு புலப்படாத ஒரு எதிரிக்கு இடையே நடக்கக்கூடிய நிரந்தர யுத்தத்தின் தொடக்க வாசகம் தான் அது.


இந்த உலகத்தில மனிதனுக்கு மிகப்பெரிய எதிரி யார் அப்படின்னு கேட்டால், பெரும்பாலானோர் மனிதனையே சொல்வார்கள். சிலர் அரசியல், சிலர் சமூகம், சிலர் பொருளாதாரம் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் குர்ஆன் நமக்கு இதை தெளிவாகச் சொல்கிறது – மனிதனுக்கு மனிதன் முதன்மை எதிரி இல்லை. மனிதனை மனிதனுக்கு எதிராக எதிரியாக மாற்றும் ஒருவன் தான் உண்மையான எதிரி. அவனே இப்லீஸ். அவன் தான் சைத்தான். அவன் ஒரு நாளும் மனிதனை நேரடியா வந்து அடிக்க மாட்டான். கத்திய எடுக்க மாட்டான். துப்பாக்கிய தூக்க மாட்டான். ஆனால் மனிதனுடைய மனசை கைப்பற்றுவான். மனிதனோட எண்ணங்களை மாற்றுவான். அவ செய்ற பாவத்தை அழகாக்குவான். அவனோட தவறை சாதாரணமாக்குவான். இறைவனை முழுக்க முழுக்க மறக்கச் செய்வான். இதுவே அவனுடைய முழு வேலையா இருக்கிறது.


இறைவன் படைத்த முதல் மனிதனான ஆதம் நபி (அலை) அவர்களின் காலத்திலேயே இந்த யுத்தம் தொடங்கிருச்சு. அல்லாஹ் ஆதத்தை படச்ச போது, ஒளியால் படைக்கப்பட்ட மலக்குகளுக்கு ஸஜ்தா செய்யச் சொன்ன போது அந்த சைத்தான் ஆன நெருப்பில் படைக்கப்பட்ட இப்லீஸ் மறுத்தான். அவன் மறுத்தது ஒரு சிறிய மறுப்பு இல்லை என் நண்பர்களே. அது அகந்தையின் உச்சம். “நான் மண்ணால் படைக்கப்பட்ட அவனைவிட சிறந்தவன்” என்ற எண்ணம் தான் அவனை சைத்தானாக்கியது. இந்த அகந்தை தான் இன்று மனிதனை அழிக்கிறது. இன்று ஒரு மனிதன் இன்னொரு மனிதனை விட தன்னை உயர்வாக நினைக்கக்கூடிய ஒவ்வொரு தருணத்திலும், அந்த எண்ணத்தின் விதை இப்லீஸிடம் இருந்து தான் வருகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். குர்ஆன் இதை தெளிவாகச் சொல்லுது. “நான் நெருப்பில் இருந்து படைக்கப்பட்டவன், அவன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டவன்” என்று சைத்தான் இப்லீஸ் சொன்னான். அந்த நாளில் அவன் ஆதத்திற்கு எதிராக ஒரு போரை அறிவித்தான். “உன் அடியார்களில் பெரும்பாலானவர்களை நான் வழிதவறச் செய்வேன்” என்று படைத்த அல்லாஹ்விடம் சத்தியம் செய்தான்.


இப்லீஸ் ஓட இலக்கு என்ன? அவன் நோக்கம் என்ன? அவன் அரசன் ஆகுவதற்கு எல்லாம் விரும்பவில்லை. அவன் உலகை ஆள கொஞ்சம் கூட விரும்பவில்லை. அவன் மனிதனை கொல்ல வேண்டும் என்று மட்டுமே நினைப்பதில்லை. அவனுடைய ஒரே இலக்கு – மனிதன் நம்மை படைத்த அல்லாஹ்வை நினைக்கக் கூடாது. வணங்கக்கூடாது. தொழுகை பண்ணக்கூடாது. தவறை நாம தவறு செஞ்சிட்டோம்னு உணரக்கூடாது.நம்மை பாவத்தில் திளைத்துக்கொண்டே அதையே வாழ்க்கை என்று நினைக்க வேண்டும். இதற்காக அவன் மனிதனின் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் புகுந்து நமக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறான்.


இறைவனின் தூதுவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன ஹதீஸில், “சைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்” என்று சொல்லி உள்ளார்கள். இதனுடைய அர்த்தம் அவன் உடலுக்குள் இருக்கிறான் என்பது கிடையாது. அவன் நம் எண்ணங்களுக்குள் இருக்கிறான். ஆசைகளுக்குள்ளே இருக்கிறான். நம் கோபத்திற்குள்ளே இருக்கிறான். நம்முடைய காம இச்சைகளுக்குள்ளே இருக்கிறான். மேலும் பேராசைக்குள்லும் இருக்கிறான். மனிதன் தனியாக இருக்கும் நேரத்தில பலவீனமாக இருக்கும் நேரத்தில மனம் உடைந்திருக்கும் நேரத்தில சைத்தானின் குரல் மிகத் தெளிவாகக் கேட்கப்படும் அல்லது அதை உணர முடியும். ஆனால் அந்த குரல் “நான் சைத்தான்” என்று சொல்லாது. அது “இது சாதாரண விஷயமப்பா”, “ஒரு முறை தான்”, “எல்லாரும் செய்றாங்க”, “உனக்கு என்ன குறைவு” என்று தான் சொல்லும்.

ஒரு குடிக்கத் தெரியாதவனை குடிகாரனாக்குவது ஒரு நாளில் நடக்காது. அது மெதுவாக நடக்கும். முதல் நாளில் “சும்மா ஒரு கட்டிங் தான்” என்று சொல்லப்படும். அடுத்த நாளில் “நம்ம டென்ஷன் குறைய” என்று சொல்லப்படும். பின்னர் “இல்லாம இருக்க முடியவில்லை” என்ற நிலைக்கு கொண்டு போய் நிறுத்தி விட்டுருவான். சூதாடத் தெரியாதவனை சூதாடியாக மாற்றுவதும் இந்த அடிப்படையில் தான். ஆரம்பத்தில் அது ஒரு விளையாட்டு போல இருக்கும். பணம் சிறிதாக இருக்கும். வெற்றி கிடைக்கும். நாம் வெற்றி அடைந்து விட்டோம் என்ற மகிழ்ச்சி வரும். அந்த மகிழ்ச்சியை சைத்தான் நம்மளோட மூளையில் பதிய வைப்பான். பின்னர் தோல்வி வந்தாலும், அந்த முதல் மகிழ்ச்சியை மீண்டும் பெற வேண்டும் என்ற ஆசையால் மனிதன் சிக்கிக் கொள்வான். பெண்களை நோக்கி பார்ப்பதே தவறு என்று உணர்ந்தவனையும், “இது இயற்கை”, “இதில் என்ன தவறு” என்று சொல்லி மெதுவாக இழுத்து உள்ளே அனுப்பிவிடுவான்.


சைத்தான் ஒருபோதும் மனிதனை நேரடியாக பாவத்திற்குள் தள்ள மாட்டான். முதலில் நம் பாவத்திற்கான வெறுப்பை அகற்றுவான். அடுத்ததாக பாவத்தின் நம் பயத்தை அகற்றுவான். பின்னர் பாவத்தின் குற்ற உணர்ச்சியை அழிப்பான். கடைசியில் பாவத்தை நம்ம வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிவிடுவான். இதுதான் அவனுக்கு கிடைக்கக்கூடிய மிகப்பெரிய வெற்றி. அதனால் தான் இன்னைக்கு பலர் தவறு செய்துவிட்டும் கூட, “இதில் என்ன தவறு” என்று கேட்கிறார்கள். இது சைத்தானின் வேலை.


குர்ஆன் நமக்கு எச்சரிக்கிறது. “சைத்தான் என்பவன் உங்களுக்கு தெளிவான எதிரி” என்று நம்மைப் படைத்த அல்லாஹ் சொல்கிறான். தெளிவான எதிரி என்றால், அவனை நாம் எதிரியாக உணர வேண்டும். ஆனால் சைத்தானின் மிகப்பெரிய சூழ்ச்சி என்னவென்றால், அவன் மனிதனை எதிரியாகவே தெரியாமல் செய்கிறான். “சைத்தான் என்று ஒன்றும் இல்லை”, “இது எல்லாம் உன் மனநிலை” என்று மனிதனை நம்பவைக்கிறான். இதைவிட பெரிய வெற்றி அவனுக்கு வேறு எது இருக்க முடியும்?


இன்னொரு முக்கியமான விஷயம் நண்பர்களே– சைத்தான் மனிதனை இறைவனை மறுக்கச் செய்வதை விட, இறைவனை நினைக்காமல் வாழச் செய்வதில் தான் அதிக வெற்றி அடைகிறான். முழுமையாக நம்மை நாத்திகன் ஆக்குவது அவனுக்கு அவ்வளவு எளிதல்ல. ஆனால் “நம்புகிறேன், ஆனால் வாழ்க்கையில் இடம் இல்லை” என்ற நிலைக்கு மனிதனை கொண்டு வருவது அவனுக்கு மிகவும் எளிது. இறைவனுக்கு செய்ய வேண்டிய தொழுகையை தள்ளிப் போடச் செய்வான். இறைவனிடம் கேட்கக்கூடிய துஆவை மறக்கச் செய்வான். பாவம் செய்த பிறகு தௌபா அதாவது மன்னிப்பு செய்ய விடமாட்டான். “நீ ஏற்கனவே கெட்டவன்” என்று சொல்லி உங்களின் நம்பிக்கையை உடைப்பான். இதுவே மனிதன் வீழ்வதற்கான முக்கிய காரணம்.


ஆனால் இத்தனை சூழ்ச்சிகளுக்கு நடுவில, அல்லாஹ் மனிதனை பாதுகாப்பற்றவனாக விட்டுவிடவில்லை. அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்பது ஒரு ஆயுதம். தொழுகை ஒரு கவசம். திக்ர் ஒரு பாதுகாப்பு. குர்ஆன் ஒரு வழிகாட்டி. சைத்தான் எவ்வளவு வலிமையானவன் என்றாலும், அவன் அல்லாஹ்வின் உண்மையான அடியார்களை ஒன்றும் செய்ய முடியாது. இதை குர்ஆனில் அவனே ஒப்புக்கொள்கிறான் – “உன் சுத்தமான அடியார்கள்மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை” என்று.


எனவே நண்பர்களே, உங்களுடைய ஒவ்வொரு தவறுக்கும் முழுக்க முழுக்க சைத்தானை மட்டும் காரணம் சொல்லி தப்பிக்க முடியாது. ஆனால் உன் தவறுகளை தூண்டியவன், அழகாக்கியவன், அதற்கு தள்ளியவன் அவன் தான் என்பதை உணர்ந்து கொண்டால், நீங்கள் விழிப்படையலாம். விழிப்படைந்த மனிதன் தான் நல்வழிக்கு திரும்ப முடியும். திரும்பிய மனிதன் தான் இறைவனின் இரக்கத்தை அடைய முடியும் என்று சொல்கிறேன்.


சைத்தானை முழுமையாக தவிர்த்துவிட்டு வாழ்க்கையை வாழ்வது சுலபம் கிடையாது. ஆனால் அவனை அடையாளம் கண்டு கொள்வது சுலபம். எது உன்னை தொழுகையிலிருந்து விலக்குகிறதோ, எது உன்னை அல்லாஹ்வின் நினைவிலிருந்தும் தூரப்படுத்துகிறதோ, எது பாவத்தை சாதாரணமாக காட்டுகிறதோ – அதுவே ஷைத்தானின் குரல். அந்த குரலுக்கு எதிராக நீங்கள் அவூது பில்லாஹி என்று சொன்ன தருணத்தில், ஒரு போர் தொடங்குகிறது. அந்த போரில் நீ வென்றால், நீ இந்த உலகத்தில் மட்டும் அல்ல, மறுமையிலும் வெற்றி பெறலாம் என்பதை இங்கே அழுத்தம் திருத்தமாக கூறிக் கொள்கின்றேன்.


இதுவே உண்மையான வாழ்க்கை. இதுவே உண்மை. இதுவே ஷைத்தானின் மாபெரும் சதி. இதுவே அதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டிய நேர்வழி.


இந்தப் பதிவு உங்களுக்கு பயன்படாட்டியும் மற்றவர்களுக்கு பயன்படும் என்பதை நம்புகிறேன் எனவே இதனை

 பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்