திருத்தணியில் நடந்த சம்பவத்தைப் பற்றிய சாமானியனின் வேண்டுகோள்
தண்டனை அதிகரித்தால் தான் குற்றங்கள் குறையும் என்ற அடிப்படையிலே நான் உங்கள் இடத்திலே பேச வந்திருக்கிறேன். நேற்று திருத்தணியில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. நான்கு சிறார்கள் என்று சொல்லிக்கொள்ளப்படுகின்ற நான்கு பேர், வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை ரயிலிலிருந்து கீழே இறக்கி கொடூரமாக வெட்டி இருக்கிறார்கள். இது ஒரு வெட்டு, இரண்டு வெட்டு அல்ல. கிட்டத்தட்ட 50க்கும் அதிகமான வெட்டுகள். இன்று அந்த இளைஞர் மருத்துவமனையில் உயிருக்கும் சாவுக்கும் இடையில் தீவிர சிகிச்சையில் போராடிக்கொண்டிருக்கிறார். இப்போது நாம் கேட்க வேண்டிய முதல் கேள்வி இது: இது ஒரு சண்டையா? இல்லை ஒரு திட்டமிட்ட கொலை முயற்சியா? அவர்கள் சாதாரணமாக இருந்தவர்கள் அல்ல. கஞ்சா, மது போதையில், கையில் பட்டாக்கத்தியுடன், ரயிலில் நின்றுகொண்டு ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் போட்டு கொண்டிருந்தவர்கள். “இப்படி செய்யாதீர்கள்” என்று அந்த சுராஜ் என்ற இளைஞர் சொன்னதற்காக, “என்னை பார்த்து முறைக்கிறாயா? உன்னை நான் என்ன செய்கிறேன் என்று பார்” என்று மிரட்டி, அவனை வெட்டியதோடு மட்டுமல்ல, அந்த கொலை முயற்சியையே வீடியோ எடுத்து அப்லோடு செய்திருக்கிறார்கள். ...